மனைவியை அடித்து கொலை செய்த கணவர்.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி

குற்றம்

இரண்டாம் திருமணத்திற்கு தடையாக இருந்த மனைவியை கணவரே அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சுப்புலட்சுமிக்கும், போடியைச் சேர்ந்த ராணுவ வீரர் முனீஸ்வரனுக்கும் 7  ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த  தம்பதிக்கு 6 மற்றும் 3 வயதுகளில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தேனி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் மனைவியுடன் முனீஸ்வரனுக்கு தவறான உறவு ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத விதமான அந்த ராணுவ வீரர் இறந்துவிட, முனீஸ்வரனுக்கு வசதியாகிப் போனது. தனி வீடு பிடித்து, முனீஸ்வரன், மனைவிக்கு தெரியாமல் அந்த பெண்ணுடன் ரகசிய குடித்தனம் நடத்தி வந்துள்ளார். எனினும் காலப்போக்கில், இந்த விவகாரம், சுப்புலட்சுமிக்கு தெரியவந்ததும், கணவனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மனைவிக்குத்தான் தெரிந்துவிட்டதே, இனி மறைத்து என்ன பிரயோஜனம் என கருதிய முனீஸ்வரன், காதலியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

சுப்புலட்சுமி தனது குழந்தைகளுடன்

இதற்கு மனைவி சுப்புலட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இதுகுறித்து, தமது பெற்றோரிடமும் சுப்புலட்சுமி கூறியுள்ளார். எனவே, அவர்கள் முனீஸ்வரனின் பெற்றோரிடம் இதுகுறித்து பேசியுள்ளனர். ஆனால், முனீஸ்வரனின் பெற்றோர் அதனை காதில் வாங்கிகொள்ளாததுடன்,  மகனின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவே இருந்துள்ளனர்.  வெறுத்துப்போன சுப்புலட்சுமி, தமது பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்கு செல்ல முயன்றுள்ளார்.

ஆனால், அதற்கும் வழிவிட மறுத்து முனீஸ்வரனின் பெற்றோர், சுப்புலட்சுமியை துன்புறுத்தியுள்ளனர். வேறுவழியின்றி, சுப்புலட்சுமி, கணவன் வசிக்கும் ஊரிலேயே தனியாக தமது பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். கணவன் குடும்பத்தை கவனிக்காததால், 100 நாள் திட்ட வேலைக்குச் சென்று தமது பிள்ளைகளை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான், கணவனின் காதலி, கர்ப்பமாகியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியான காதலிக்கு வளைகாப்பு செய்ய முனீஸ்வரன் குடும்பத்தினருடன் புறப்பட்டுள்ளார். இதனையறிந்த மனைவி சுப்புலட்சுமி கொதித்துப் போயுள்ளார். இதுகுறித்து, கணவனிடமும், மாமனார் மாமியாரிடமும் தட்டிக்கேட்டு தகராறு செய்துள்ளார்.

முனீஸ்வரன்

பின்னர்தான், கொலை நடந்த அன்று, சுப்புலட்சுமி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து முனிஸ்வரனின் பெற்றோரிடம் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர்.

தகலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுப்புலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சுப்புலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, சுப்புலட்சுமியை, முனீஸ்வரன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர் அவரை அடித்து கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, முனீஸ்வரன், அவரது பெற்றோர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். தந்தையின் தவறான உறவு விவகாரத்தால், தாய் கொலை செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவரது 2 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *